×

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும்; ஜனவரி 2ம் தேதி முதல் விநியோகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்க முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதன்முதலில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, ‘பொங்கல் பரிசு பை’ திட்டம் கொண்டு வந்தார். அப்போது, பொங்கல் தயாரிக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து அதிமுக ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பொங்கல் தயாரிக்க தேவையான பொருட்கள் உள்பட சமையலுக்கு தேவையான பொருட்களும் அடங்கி இருந்தது. கடந்த ஆண்டுகள் போன்று, 2023ம் ஆண்டு (வருகிற ஜனவரி) பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு வழங்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா, ரொக்கத்தொகை வழங்கப்படுமா என்பது குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தது.

இந்நிலையில், 2023ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட பரிசுப் பொருட்கள் வழங்குவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2023ம் ஆண்டு  தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் சிறப்பாக கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை வருகிற 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pongal ,Chief Minister ,M.K.Stal , Ration card holders will be given a Pongal gift of Rs.1,000 each with 1 kg of sweet rice and sugar; Distribution from January 2: Chief Minister M.K.Stal's announcement
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...